ஜி-20 மாநாடு - களைகட்டுகிறது டெல்லி!


ஜி-20 மாநாடு - களைகட்டுகிறது டெல்லி!
x

உலகம் முழுவதுமே அடுத்த சில நாட்களில் டெல்லியில் நடக்கப்போகும் ஜி-20 மாநாட்டையே உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது.

உலகம் முழுவதுமே அடுத்த சில நாட்களில் டெல்லியில் நடக்கப்போகும் ஜி-20 மாநாட்டையே உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. மிகவும் முக்கியமான நாடுகள், ஜி-20 என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி-20 நாடுகளின் பங்களிப்பு மட்டும் 85 சதவீதமாகும். இது உலகளாவிய மொத்த வர்த்தகத்தில் 75 சதவீதமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த நாடுகளில் வசிப்பவர்கள். உலகில் எந்த பிரச்சினை என்றாலும், இந்த நாடுகள் எடுக்கும் நிலைப்பாடுதான் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மாநாடு, ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில், பல கட்டங்களாக பல்வேறு மட்டங்களில் நடக்கும்.

கடந்த 2022-ல் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், இந்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு தலைமை பொறுப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. இந்த தலைமை பொறுப்பின் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தியாவின் தலைமைத்துவத்தின் கருப்பொருள், 'வசுதெய்வ குடும்பகம்' அதாவது, 'ஒரே பூமி- ஒரே குடும்பம்- ஒரே எதிர்காலம்' ஆகியவைதான். இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டுக்கான இலச்சினை, அதாவது 'லோகோ' இந்திய தேசிய கொடியின் வண்ணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா நடத்தும் ஜி-20 மாநாடு டெல்லியில் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது. இதுவரை இந்தியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நகரங்களில், இந்த மாநாட்டின் பல கூட்டங்கள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில், சென்னையில் சில கூட்டங்கள் நடந்துள்ளன. டெல்லி ஜி-20 மாநாட்டையும், இதற்காக வரும் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளையும் வரவேற்க இப்போதே டெல்லி விழாக்கோலம் காண தொடங்கிவிட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல உலகத் தலைவர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், பிரதிநிதிகள் என்று ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டப கருத்தரங்கு மையத்தில், இந்த இரு நாட்களும் மாநாடு நடக்கிறது.

சுற்றுச்சூழல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து ஜி-20 நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்க 6½ லட்சம் பூந்தொட்டிகள் டெல்லி முழுவதும் வைக்கப்படுகின்றன. இந்த இரு நாட்களும் டெல்லியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தலைவர்கள் உள்பட ஏராளமான பிரதிநிதிகள் தங்குதடையின்றி விமானங்களில் வருவதற்கு வசதியாக, 160 உள்நாட்டு விமானங்களை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தலைவர்கள் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நாட்டுக்கே மிகப்பெருமை அளிக்கும் ஜி-20 மாநாடு கோலாகலமாக, சிறப்பாக, வெற்றிகரமாக நடப்பது உலக அரங்கில் இந்தியாவின் புகழ்கொடியை பட்டொளி வீசி பறக்க செய்யும்.


Next Story