மாசை கட்டுப்படுத்த மின்சார வாகனங்கள்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் உள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் உள்ளார். இதற்காக, அவர் 'பசுமை தாயகம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். காற்று, நீர் மாசுகள் இருக்கக்கூடாது என்ற வகையிலும், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையிலும், பொதுமக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு வகைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி பசுமை தாயகம் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தினார். அப்போது அவர், "உலக மக்கள் அனைவரும் பேராபத்தில் சிக்கி உள்ளனர். காலநிலை மாற்றம்தான் இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு மாபெரும் சவால். காலநிலை மாற்றத்தால் அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாயம் பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல் நலக்கேடு என ஆண்டாண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, உலகளவில் வெளியாகும் கரிம உமிழ்வை 2030-க்குள் 50 சதவீதம் குறைக்க வேண்டும். நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதை வடிவ எரிபொருள் பயன்பாட்டை பெருமளவில் குறைக்க வேண்டும். அதற்காக பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். அதிகமான மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், கண்டிப்பாக காற்றில் மாசு ஏற்படுத்தும் வகையில், புகையை கக்கும் பெட்ரோல்-டீசல் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்" என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்.
சவுமியா அன்புமணி கூறியது நிதர்சனமான உண்மை. இந்த கருத்துதான் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த உலக காலநிலை மாநாட்டில் முக்கியமாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, "டீசல் கார்களுக்கு அது பயணிகள் வாகனங்களாக இருந்தாலும் சரி, வணிக வாகனங்களாக இருந்தாலும் சரி, கார், ஏன் டீசல் ஜெனரேட்டர்களாக இருந்தாலும் சரி 10 சதவீதம் மாசு வரியை கூடுதல் சரக்கு சேவை வரியாக வசூலிக்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொள்ள இருக்கிறேன்" என்று பேசினார். ஆனால், சற்று நேரத்தில் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டார்.
ஆக, டீசல்-பெட்ரோலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது. இப்போது மின்சார வாகனங்கள் கட்டமைப்புக்கு கடன் கொடுக்க பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. இந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணமான பேட்டரி விலையும் இப்போது குறைந்து வருகிறது. பெருகிவரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மாசை குறைக்கவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போது மத்திய-மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளுடன் கூடுதலாக இன்னும் பல சலுகைகளை வழங்க வேண்டும்.