டிரோன்களை இயக்கப்போகும் பெண்கள் !
விரைவில் தமிழகத்தில் விவசாயிகள் டிரோன்களை பயன்படுத்தும் வேளாண் புரட்சி நடக்கும் என்கிறார், முதன்மை செயலாளர் அபூர்வா.
இன்றைய கால கட்டத்தில் எல்லா துறைகளிலும், எல்லா பணிகளிலும் நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் பயன்பாடுகள் ஆழ வேரூன்றிவிட்டன. இதனால் உற்பத்தி திறனும் அதிகரித்துவிட்டது, வேலை நேரமும் மிச்சமாகிறது. செலவும் குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில் டிரோன்கள் எனும் ஆளில்லா குட்டி விமானங்களின் சேவை எல்லா துறைகளுக்கும் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
முதலில் திருமணங்களில் மிக சிறிய டிரோன்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் பயன்படுத்தப்பட்டன. காவல்துறை, வனத்துறையிலும் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது விவசாய பணிகளிலும் டிரோன்கள் சேவை மிக வசதியாக இருக்கிறது. டிரோன்களை பூச்சி மருந்து தெளித்தல், உரம் போடுதல் போன்ற வேலைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் செலவும் குறைவாகிறது. குறைந்த நேரத்தில் அதிக இடங்களில் இந்த வேலைகளை முடித்து விடவும் முடிகிறது. இத்தகைய டிரோன்களின் விலை அதிகம் என்பதால் இது இன்னும் பிரபலமடையவில்லை.
இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் 15 ஆயிரம் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு பெரிய டிரோன்கள் அடுத்த 2024-25, 2025-26-ம் ஆண்டுகளில் ரூ.1,261 கோடி செலவில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட அறிவிப்புக்கு, செயல்வடிவம் கொடுக்கும் முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'தீனதயாள் அந்தியோதயா' திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 89 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களில், 15 ஆயிரம் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த உதவி வழங்கப்படுகிறது.
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு டிரோனின் விலை ரூ.10 லட்சம். இதில் ரூ.8 லட்சம் மத்திய அரசாங்க நிதி உதவியாக கிடைக்கும். மீதி ரூ.2 லட்சத்தை மகளிர் சுய உதவிக் குழுக்கள் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவியை பெறும் மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணுக்கு, டிரோன் பைலட்டுக்கான பயிற்சி வழங்கப்படும். மற்றொரு பெண்ணுக்கு டெக்னீசியன் பயிற்சி வழங்கப்படும். அந்த மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க, உரம் போட வாடகைக்கு விட முடியும்.
தமிழ்நாட்டில் 3 லட்சத்து 18 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இந்த சுய உதவிக் குழுக்கள் திறம்பட செயல்படுவதால் தமிழ்நாட்டுக்கு அதிக சுய உதவிக்குழுக்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கக்கூடிய டிரோன் வழங்க பிரதமர் நரேந்திரமோடி முடிவெடுத்திருப்பதாக மத்திய இணை மந்திரி வி.கே.சிங் 2 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அருகே அக்ராவரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியிருக்கிறார்.
ஆனால், தமிழக அரசின் வேளாண்மைத் துறை ஏற்கனவே டிரோன் பயன்பாட்டை தொடங்கிவிட்டது என்கிறார், முதன்மை செயலாளர் அபூர்வா. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 2 டிரோன்கள் இருக்கின்றன. இப்போது 10 விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் 50 சதவீத மானியத்துடன் டிரோன்கள் வழங்குவதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது. நானோ யூரியா, நானோ டி.ஏ.பி. புதிய விதமான மருந்துகளை வேர் மூலம் பயிர்களுக்கு தெளிக்காமல், இலையில் தெளிப்பதற்கு டிரோன்களை பயன்படுத்தலாம். விரைவில் தமிழகத்தில் விவசாயிகள் டிரோன்களை பயன்படுத்தும் வேளாண் புரட்சி நடக்கும் என்கிறார், அபூர்வா.