தமிழ்நாட்டில் பெருகிவரும் நீரிழிவு நோய்


தமிழ்நாட்டில் பெருகிவரும் நீரிழிவு நோய்
x

இப்போதெல்லாம் எந்த நோய்க்கான சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்றாலும், அதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கிறார்கள்.

இப்போதெல்லாம் எந்த நோய்க்கான சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்றாலும், அதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கிறார்கள். இதை ஒரு 'சைலண்ட் கில்லர்' என்பார்கள். இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய அரசாங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிதி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், உலக புகழ் பெற்ற 'லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நீரிழிவு நோயின் பாதிப்பு அபாயகரமான அளவில் இருப்பது தெளிவாகியுள்ளது.

நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே அறிய 'ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' என்ற பரிசோதனையை செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மில்லி கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கப்படும் சோதனையில் 140 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருந்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று கூறும் டாக்டர்கள், இதுபோல வெறும் வயிற்றில் 101 மி.கி. முதல் 125 மி.கி. வரையோ, சாப்பிட்டு 2 மணி நேரத்துக்கு பின்பு 141 மி.கி. முதல் 199 மி.கி. வரையோ இருந்தால், அதை நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும் கூறுகிறார்கள். வெறும் வயிற்றில் 126 மி.கி.க்கும், சாப்பிட்ட பிறகு 200 மி.கி.க்கும் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று பொருள். இப்போது எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 10 கோடியே 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு, அதாவது மொத்த மக்கள்தொகையில் 11.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயும், 15.3 சதவீத மக்களுக்கு நீரிழிவு நோயின் முந்தைய நிலையும் இருக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில், தமிழ்நாடு 6-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயும், 10.2 சதவீதம் பேருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலையும் இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காலை 7 மணி முதல் இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர, அனைத்து தாலுகா, மாவட்ட, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், 'இல்லம் தேடி மருத்துவம்' திட்டத்திலும், ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த பரிசோதனை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, நீரிழிவு நோய் இருந்தால் அதற்குரிய மருந்துகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எனவே, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோயுள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், உடனடியாக ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள். அரசும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக கிராமப்புற பாமர மக்களிடம் ஏற்படுத்த விளம்பரங்கள் செய்ய வேண்டும்.


Next Story