`எண்ணும் எழுத்தும்'
இளம் தளிர்களின் அடிப்படை கல்வியை வலுவுள்ளதாக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளார்.
இளம் தளிர்களின் அடிப்படை கல்வியை வலுவுள்ளதாக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளார். `ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா', 'இளமையில் கல்' என்பது முதுமொழி. அதுமட்டுமல்லாமல், இப்போது ஒரு அறிவியல் ஆய்வில், ஒரு குழந்தை தனது 5 வயதை அடைவதற்குள் 90 சதவீதம் அளவுக்கு மூளை வளர்ந்து விடுவது தெரியவந்துள்ளது. 19 மாதங்களுக்கு மேலாக கொரோனாவால் மூடப்பட்டு இருந்த பள்ளிக்கூடங்கள் கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. 2 ஆண்டுகள் பள்ளிக்கூடத்துக்கே செல்லாமல், இப்போது உயர் வகுப்புகளுக்கு மாணவர்கள் வந்துள்ளனர். இந்த 2 வகுப்புகளுக்கு உரிய கற்றல் திறனை மாணவர்கள் எந்த அளவுக்கு அடைந்து இருக்கிறார்கள் என்பது ஆசிரியர்களுக்குத்தான் தெரியும்.
மேல் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரையில், ஆன்லைன் கல்வி மூலமாகவோ, கல்வி தொலைக்காட்சி மூலமாகவோ, தங்கள் சொந்த முயற்சியிலோ நிச்சயம் படித்து இருப்பார்கள். ஆனால் கற்றுக்கொடுத்தால்தான் புரிந்து கொள்ளும் வயதுடைய 5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் கற்றல் திறன்தான் நிச்சயம் பின் தங்கியிருக்கும். அந்த வகையில் 3-ம் வகுப்பில் இப்போது சேர்ந்திருக்கும் குழந்தைகள், 2-ம் வகுப்பு கற்றல் அடைவைப் பெறவில்லை. இரண்டாம் வகுப்புக்கு வந்து இருக்கும் குழந்தைகள், முதல் வகுப்புக்குரிய கற்றல் அடைவை பெறவில்லை. ஆக இந்த குழந்தைகளின் கற்றல் திறனில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில் மாணவர்களின் கற்றல்திறன் குறைந்து இருப்பதை மற்றொரு ஆய்வும் உறுதிப்படுத்துகிறது.
ஆக ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு சாலையில் பயணம் சீராக இருக்க வேண்டுமானால், மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். பள்ளம் இருந்தால் அதை நிரப்பி சீர் செய்தால்தான் பயணம் வேகமாக இருக்கும். அந்தவகையில் 5 வயது முதல் 8 வயது வரையிலான இளம் வயது மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் திட்டம்தான், முதல்-அமைச்சர் அறிவித்துள்ள 'எண்ணும் எழுத்தும்' திட்டம். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இந்த திட்டத்தின் நோக்கத்தை சுருக்கமாக, அதே நேரத்தில் தெளிவாகவும் தெரிவித்து விட்டார். "கொரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் ஓராண்டாக, ஏன் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தன. அதனால் வகுப்புகளில் நேரடியாக குழந்தைகள் கற்கும் வாய்ப்பை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கற்றலில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதனைக் குறைக்கவும், குழந்தைகளின் கற்றலை, அவர்களின் ஆற்றலை அதிகப்படுத்தவும் 'எண்ணும் எழுத்தும்' என்ற முன்னோடி திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும், பிழையின்றி படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்யவுமான எழுத்தறிவையும், எண்ணறிவையும் பெறுவதை உறுதி செய்வதே இலக்காகும். மேலும் குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் பாடல் களம், கதை களம், செயல்பாட்டுக்களம், படைப்புக்களம், படித்தல் களம் மற்றும் பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், கற்றல், கற்பித்தல் நடைபெறும். இதனால் இந்த திட்டம் குழந்தைகளுக்கு வெறும் ஏட்டுக்கல்வியாக இருக்காது. அவர்களுக்கு பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புதிர்கள், கலைகள் மற்றும் கைவினை பொருட்களால் எண்ணும் எழுத்தும் வகுப்பறைகள் நிறைந்து இருக்கும். இது சிறுவயது மாணவர்களின் கற்றல் திறனை நிச்சயம் மேம்படுத்தும். அவர்களின் கற்றல் ஆர்வத்தை, திறனை கவன சிதறல் இல்லாமல் வளர்க்கும். ஆனால் இந்த திட்டத்தின் வெற்றி அவர்களுக்கு தாயாய், தகப்பனாய், நல்லாசிரியராய் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பெருமக்களின் முழு ஈடுபாட்டில்தான் இருக்கிறது.