மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
x

ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் ‘பில்’ கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு, குறிப்பாக ‘இன்டர்நெட்’ வசதி இல்லாதவர்கள், கிராமப்புற மக்கள், முதியோருக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டு விடும்.

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு', 'ஒரே நாடு ஒரே நுழைவு தேர்வு' என்ற வரிசையில் உள்ள 'ஒரே நாடு ஒரே அடையாள அட்டை' என்று கூறப்படும் ஆதார் அட்டையின் அவசியம் இப்போது எல்லா சேவைகளுக்கும் மிக முக்கியமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த சேவையையும் பெற முடியாது என்றநிலை உருவாகிவிட்டது.

இப்படி 'ஆதார்' இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற நிலையில், சமீபத்தில் ஒருநாள் திடீரென்று மின்சார வாரியம் அனைத்து வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை, விவசாய இணைப்புதாரர்கள் என அனைவரின் சொல்போன்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியது. 'உடனடியாக உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வணிக ரீதியான மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் இவ்வாறு இணைக்க தேவையில்லை. சமீபத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் கட்ட வேண்டியவர்கள் எல்லாம் மின்வாரிய அலுவலகங்களில் கட்ட முடியாது. 'ஆன்லைன்' மூலம்தான் கட்டவேண்டும் என்று கூறப்பட்டது.

2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையிலும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும் ஏராளமானவர்களுக்கு, குறிப்பாக கூட்டு குடும்பத்தினருக்கு அதிக கட்டணம் வந்துவிடுகிறது. உடனடி ஆதார் இணைப்புக்காக பொதுமக்களிடையே எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக இந்த இணைப்பு பணிக்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் இந்த மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன.

அதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றாலும், இப்படி திடீரென்று மின் இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைக்க சொல்வதற்கு என்ன காரணம்?. இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரமும், குடிசை மற்றும் விவசாய இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் வழங்குவதில் மாற்றம் வந்துவிடுமோ? என்ற அச்சமும் பொதுமக்களுக்கு இருக்கிறது.

எனவே, இந்த திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்? என்ற தெளிவான விளக்கத்தை தெரிவித்தால் நல்லது. மற்றொரு நல்ல செய்தியாக ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் ஆன்லைனில்தான் கட்டவேண்டும் என்ற அறிவிப்பு இப்போது அமலில் இல்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளிக்காததால் இதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் உள்ள மின்சார கட்டணத்தை ஆன்லைனில்தான் கட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கலாமா? என்று பரிசீலனை நடந்து வருகிறது.

ஆனால், ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் 'பில்' கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு, குறிப்பாக 'இன்டர்நெட்' வசதி இல்லாதவர்கள், கிராமப்புற மக்கள், முதியோருக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டு விடும். மொத்தத்தில் வசதிகள் இருப்பவர்களுக்கும், ஆன்லைனில் மின்சார கட்டணம் கட்ட முடிபவர்களுக்கும் வெகுசுலபம். இல்லாதவர்களுக்கு பெரும் சிரமம். அந்த கஷ்டத்தை போக்கலாமே... எனவே, ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைனிலும் கட்டலாம். நேரில் அலுவலகத்துக்கு வந்தும் கட்டலாம் என அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடலாமே!.


Next Story