குழப்பமே உன் பெயர்தான் 'நீட்' தேர்வா?


Confusion is your name NEET exam?
x

‘நீட்’ தேர்வு மீது மாணவர்களுக்கும் நம்பிக்கையில்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

சென்னை,

பிளஸ்-2 படித்து முடித்தவுடன் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு' என்று அழைக்கப்படும் 'நீட்' தேர்வினால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மாணவர்கள் தற்கொலை செய்யும் சோகச்சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதே சாலச்சிறந்தது. 'நீட்' தேர்வுக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்துதானே வினாக்கள் தயாரிக்கப்படுகின்றன. பிறகு இந்த தேர்வுக்கு என்ன அவசியம் வந்தது? என்று கேள்விகளும் எழுகின்றன. இந்த தேர்வில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லை என்று பல கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனாலும், மத்திய அரசாங்கம் 'நீட்' தேர்வுவேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 'நீட்' தேர்வின் மீது பல குறைகள் கூறப்பட்டாலும், இந்த ஆண்டு குறைகளின் உச்சத்துக்கே சென்றுவிட்டது. 'நீட்' தேர்வை இந்த ஆண்டு நாடு முழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதியதாக கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியான தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவில் பல குழப்பங்கள் இருந்தன. 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. காரணம் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது. இந்த தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததாக ஆதாரத்துடன் புகார்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது அது சி பி ஐ வசம் சென்று பலர் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.

நிறையப்பேர் உயர் மதிப்பெண்களை பெற்ற விவகாரத்தில், 1,563 பேருக்கு சிறு காரணங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக 'நீட்' தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்த நடைமுறைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வும் நடத்தப்பட்டது. அந்த 1,563 பேரில் 813 பேர்தான் அந்த தேர்வை எழுதினார்கள். இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு இந்த மதிப்பெண்களின் வெளிப்படைத்தன்மையை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மீண்டும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகள் வெளியிடப்படவேண்டும் என்று உத்தரவிட்டதற்கேற்ப அவ்வாறும் முடிவு வெளியானது.

அதனைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு மேலும் ஒரு தீர்ப்பையும் வெளியிட்டது. அதில், மறுதேர்வு நடத்தப்பட்டவர்களுக்கும், அந்த தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட திருத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலும், தேர்வில் இயற்பியல் வினாவுக்கு டெல்லி ஐ ஐ டி குழு அளித்த பதிலுக்கு வழங்கிய மதிப்பெண் அடிப்படையிலும் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படியும் முடிவு வெளியானது. அதில் கடந்த தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அப்படியே தலைகீழாக மாறியது. இதனால் தரவரிசைப்பட்டியலில் முன்னும், பின்னுமாக மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக, இந்த ஆண்டு 'நீட்' தேர்வு முடிவுகள் 3 முறை வெளியிடப்பட்டு, "குழப்பமே உன் பெயர்தான் 'நீட்' தேர்வா?" என்று சொல்லும்படியாகிவிட்டது. இப்போது 'நீட்' தேர்வு மீது மாணவர்களுக்கும் நம்பிக்கையில்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தநேரத்தில் தமிழ்நாடு, மேற்குவங்காளம், கர்நாடகா மாநிலங்கள் கோரியபடி 'நீட்' தேர்வை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் அல்லது 'நீட்' தேர்வு வேண்டாம் என்று கூறும் மாநிலங்களுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கவேண்டும்.


Next Story