லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் அயோத்தி கோவில்!
ராமர் இலங்கையில் இருந்து சீதா பிராட்டியாரை மீட்டு ராமேசுவரம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்த பிறகே அயோத்திக்கு புறப்பட்டு சென்றார் என்பது ஐதீகம்.
'அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ராமபிரான் தனது பிரமாண்ட கோவிலில் காட்சியளிக்கப்போகிறார்' என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், ராமர் பிறந்த பூமி என்று இந்துக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ள ராம ஜென்ம பூமியில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கோவிலில் இன்று மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த புனித விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மிகவும் சிறப்பாக, 55 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவுக்காக பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் கடுமையான விரதத்தை கடைப்பிடிக்கிறார். வெறும் தரையில் படுத்து உறங்கி, தினமும் இளநீர் மட்டுமே பருகி, வேறு எதுவும் சாப்பிடாமல், கோ பூஜை அதாவது பசுக்களுக்கு உணவு அளித்து பூஜை செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், ராமர் சென்ற மற்றும் அவர் தொடர்புடைய கோவில்களுக்கு சென்று பூஜை செய்து, அங்கிருக்கும் புண்ணிய தீர்த்தங்களை கொண்டுவந்து ராமருக்கு அர்ப்பணிக்கிறார்.
அந்த வகையில், பிரதிஷ்டை நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலுக்கும், ராமேசுவரம் கோவிலுக்கும் ஆன்மிக பயணம் சென்றார். ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாதர் அயோத்தி மன்னர்களுக்கு, குறிப்பாக ராமபிரானுக்கு குல தெய்வம் ஆவார். வால்மீகி எழுதிய ராமாயணத்திலும், கம்பர் எழுதிய கம்பராமாயணத்திலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ராமபிரானுடைய தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு தரிசனம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு, ராமநாதசாமி கோவிலுக்கு சென்று அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். அங்கு நடந்த ராமாயண சொற்பொழிவுகளிலும் கலந்துகொண்டார். ராமேசுவரம் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தது இதுவே முதல் முறை.
ராமர் இலங்கையில் இருந்து சீதா பிராட்டியாரை மீட்டு ராமேசுவரம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்த பிறகே அயோத்திக்கு புறப்பட்டு சென்றார் என்பது ஐதீகம். அடுத்த நாள், அதாவது நேற்று தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சென்று சிறப்பு பூஜை செய்த பிறகு அங்குள்ள கோதண்டராமசாமி கோவிலுக்கு சென்று ராமர், சீதா, ஆஞ்சநேயரை வழிபட்டுவிட்டு புறப்பட்டு சென்றார். ஆக, அயோத்தி கோவில் பிரதிஷ்டையில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு பங்கு உண்டு. இன்று நடக்கும் பிரதிஷ்டையில் நாடு முழுவதிலும் இருந்து 4 ஆயிரம் மடாதிபதிகள், துறவிகள் உள்பட 81 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அடுத்த நாள் முதல் பக்தர்கள் வந்து ராமரை தரிசிக்கலாம். தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பக்தர்கள் வருவதற்காக ரெயில், விமான போக்குவரத்துகள் மற்றும் சாலை போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் அயோத்தி இந்தியாவின் ஒரு ஆன்மிக அடையாளமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் இப்போது அயோத்தி பெயர் பெற்று விளங்குகிறது.