பட்ஜெட்டில் அறிவித்தது, நிதி ஒதுக்கீட்டில் இல்லையே !


Announced in the budget, not in the budget!
x

2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரெயில்வே பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன.

சென்னை,

கடந்த நிதியாண்டில் ரெயில்வே துறையின் வருமானம் ரூ.2.40 லட்சம் கோடியாக இருந்தது. இதில் செலவு ரூ.2.23 லட்சம் கோடியாகும். இது சேவைத் துறை என்பதால், லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியாது. 2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரெயில்வே பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 2017-ம் ஆண்டு முதல் ஒன்றாகவே தாக்கல் செய்யப்படுகிறது. என்றாலும், ரெயில்வேயில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர பென்ஷனுக்கான நிதியை இப்போது வரை ரெயில்வே துறையில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்துதான் வழங்கப்படுகிறது. இது ரெயில்வே வருமானத்தில் பெரும்பகுதியை எடுத்துவிடுகிறது.

ரெயில்வே வருமானத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கணிசமான தொகை செல்கிறது. ஆனால், ரெயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுவதாக ஒரு மனக்குறை இங்குள்ள மக்களிடம் இருக்கிறது. தமிழகத்துக்கு புதிய ரெயில்கள் - திட்டங்கள் போதுமான அளவில் இல்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. குறைந்த அளவு நிதி ஒதுக்கீடும் அந்த ஆண்டிலேயே ஒதுக்கப்படுவதில்லை என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்ற தகவல் 'பிங்க் புக்' என்ற பெயரில் வெளியிடப்படும் விரிவான அறிக்கையில்தான் தெரியவரும். இந்த புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்துக்கான ரெயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதாவது, புதிய ரெயில் பாதைகளுக்காக தெற்கு ரெயில்வேக்கு ரூ.976 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விரிவான அறிக்கையில் ரூ.301 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட தொகையில் 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமாக இருக்கிறது.

இதுபோல, தமிழகத்தின் புதிய வழித்தடங்களான திண்டிவனம்-செஞ்சி- திருவண்ணாமலை ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது ரூ.1,000 மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - மாமல்லபுரம் - கடலூர் கடற்கரை ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.1,000, ரூ.100 கோடி அறிவிக்கப்பட்ட மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.18 கோடி, ஈரோடு- கரூர் ரெயில் பாதைக்கு ரூ.1,000, காட்பாடி - விழுப்புரம் ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.1,000, சேலம்- கரூர்- திண்டுக்கல் ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.1,000 என்று பல திட்டங்களுக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கியிருப்பதை பார்த்தால், இந்த திட்டங்கள் நிறைவேறுவதை இந்த தலைமுறை பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

மொத்தத்தில் பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய ரெயில் திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதியில் பெருமளவு தடாலடியாக குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. ரூ.1,000 நிதியை வைத்து ஒரு மாட்டு வண்டி கருங்கல்கூட வாங்க முடியாது. பிறகு எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்?. எனவே, தமிழகத்துக்கு புதிய ரெயில் திட்டங்களும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நமது உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும், மத்திய அரசாங்கமும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது என்பதுதான் மக்களின் பரவலான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story