நூற்றாண்டு கண்ட கலைஞர் ஒரு சகாப்தம்!


A Century Continent Karunanidhi An Era!
x

தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராத பற்றும், சலிப்படையாத உழைப்பும் இருந்தால், பொது வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்பதற்கு கலைஞரே எடுத்துக்காட்டு.

சென்னை,

வாழும்போதே வரலாறாகவும் தத்துவமாகவும் சாதனை படைத்து 94 வயது வரை வாழ்ந்து ஒரு சகாப்தமாய் நினைவில் வாழும் கலைஞர் கருணாநிதிக்கு இன்று நூற்றாண்டு நிறைவு விழா. எந்த பின்புலமும் இல்லையென்றாலும் தமிழ் மீது கொண்ட தணியாத பற்றும், கொள்கை மீதான உறுதிப்பாடும், தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராத பற்றும், சலிப்படையாத உழைப்பும் இருந்தால், பொது வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்பதற்கு கலைஞரே எடுத்துக்காட்டு.

சின்னஞ்சிறு வயதிலேயே தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவராக விளங்கிய கலைஞர் கருணாநிதி, 14 வயதிலேயே தோளில் தமிழ் கொடியை ஏந்திக்கொண்டு திருவாரூர் வீதிகளில், "ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே" என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். மேலும், மாணவப் பருவத்திலேயே ஒரு பத்திரிகையாளராகவும் உருவெடுத்தார். 15-வது வயதிலேயே 'மாணவ நேசன்' என்ற கையெழுத்து பிரதியை நடத்தியதுடன், அதை சுய மரியாதை இயக்க தலைவர்களுக்கு தபாலில் அனுப்பினார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட கலைஞர், அண்ணா 1949-ல் தி.மு.க.வை தொடங்கியபோது அதில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார்.

1957-ல் தி.மு.க. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், கலைஞர் கருணாநிதி தனது 33-வது வயதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அன்று முதல் 2016-ம் ஆண்டு திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டது வரை, தான் நின்ற 13 தேர்தல்களிலும் தோல்வியே காணாமல் வென்ற ஒரே தலைவர் கலைஞர். கடைசியாக போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில்கூட, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 1967-ல் தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று, அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்த நேரத்தில், பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றி அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

அண்ணா மறைவுக்கு பிறகு 1969-ல் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அவர், 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்து தமிழ் மக்களுக்கு அருந்தொண்டாற்றினார். அதுபோல 1969 முதல் தன் வாழ்நாள் இறுதி வரை சுமார் 50 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைவராக இருந்து கட்சியை உயிர்ப்போடு வழிநடத்தினார். இதுவரை இந்தியாவில் எந்த கட்சி தலைவரும் 50 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் அதிக அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி, அவர்களுக்காக தனி அமைச்சகங்களை உருவாக்கி இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்ந்தார்.

சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைக்கும் உரிமையை பெற்றுத்தந்தது கலைஞர் கருணாநிதிதான். தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக்கொடுத்த பெருமையும் அவரையே சாரும். தமிழ்நாட்டில் 30 அணைகளை கட்டியதோடு மட்டுமல்லாமல், விவசாயம் செழிக்க இலவச மின்சாரத்தையும் வழங்கினார். இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்கூட்டியே கணித்து, அதற்காக தனி அமைச்சகத்தை கொண்டுவந்து இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கினார். அவர் ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்கள் அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

வாழும்போதே தனது செயல்களால் புகழ்கொடி நாட்டிய கலைஞரை, எதிர்கால சந்ததியும் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில், 8, 9, 10 -ம் வகுப்பு பாட புத்தகங்களில் அவரை பற்றி இடம்பெறச் செய்திருப்பது, அவரது சாதனைக்கு கிடைத்த புகழ் மகுடமாகும்.


Next Story