75-வது சுதந்திர தின அமுத பெருவிழா!
உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளான பிரதமர், முதல்-அமைச்சர் முதல் கிராமப்பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வரை மூலமே மக்களுக்கான நிர்வாகம் நடக்கிறது.
"இந்தியா எங்கள் நாடு; நான் வாழும் நாடு, எல்லா உரிமைகளையும் பெற்று நான் மகிழ்வுடன் வாழும் நாடு" என்று இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் குற்றால அருவியென மகிழ்ச்சி பாய்ந்து வரும் வேளையில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில், இன்று 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளான பிரதமர், முதல்-அமைச்சர் முதல் கிராமப்பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வரை மூலமே மக்களுக்கான நிர்வாகம் நடக்கிறது. மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு, எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் ரத்தமும், வியர்வையும், சிறைகளில் பட்ட சித்ரவதைகளும், வீர மரணங்களுமே காரணம்.
ஆங்கிலேயர் வந்தபோது 640 துண்டுகளாக சிதறுண்டு கிடந்தது இந்தியா. நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சிதறிக்கிடந்த இந்திய துணைக் கண்டத்தை, தங்களின் ராஜ தந்திரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு கீழ் கொண்டுவந்து ஆட்சி நடத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். 6 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த பிரிட்டனுக்கு, இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலம் ஏறத்தாழ 200 ஆண்டுகளாகும். அதில் சரியாக 150 ஆண்டுகளாக சுதந்திர போராட்ட வீரர்கள் அடிமைத்தளையில் இருந்த தாய் நாட்டை மீட்க பாடுபட்டனர்.
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்காக 1498-ம் ஆண்டு வாஸ்கோடகாமா வழி கண்டது முதல், ஐரோப்பியர் இந்தியாவுடன் வணிக தொடர்புகொள்ள தொடங்கினார்கள். போர்த்துக்கீசியரும், டச்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்து வியாபாரத்தில் பெருத்த லாபம் கண்டதை பார்த்தவுடன், ஆங்கிலேயருக்கும் இந்தியாவுக்கு வந்து வியாபாரம் செய்ய ஆசை வந்தது. அதனால், 220 ஆங்கிலேய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, கிழக்கு இந்திய கம்பெனியை தொடங்கி, முதலில் சூரத்திலும், தொடர்ந்து கொல்கத்தாவில் நுழைந்து, பின்பு மதராஸ் பட்டினம் என்னும் சென்னையில் காலெடுத்து வைத்தார்கள். அதன் பிறகுதான், மும்பையில் நுழைந்தார்கள்.
இப்படி வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் ஆதிக்க பிடிக்குள் இந்தியாவை கொண்டுவந்தனர். இங்குள்ள சிற்றரசர்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டும், ராஜ தந்திரத்தோடு பல இடங்களைப் பெற்றும், நாட்டையே அடிமையாக்கிவிட்டார்கள். கொதித்தெழுந்த சுதந்திர போராட்ட வீரர்களின், 150 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாகத்தான், நாடு சுதந்திரம் பெற்று, இன்று 75-ம் ஆண்டு அமுத பெருவிழாவை கொண்டாடுகிறோம்.
விடுதலை போரில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. 1806-ம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி சுதந்திர தாகத்துக்கு மூல காரணமாகும். இந்த 75 ஆண்டுகளில், இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், இந்தியாவில் நிலவும் அமைதி மற்றும் இந்திய மக்களின் ஒற்றுமை, உலகையே வியக்க வைக்கிறது. இந்த சுதந்திரம் நிலைக்க வேண்டுமென்றால், இன்று பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக்கொடி, எப்போதும் நம் உள்ளங்களில், இது என் நாடு, நான் அதன் புதல்வர் என்ற உணர்வோடு பறக்கவேண்டும்.
இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு நல்ல பல அறிவிப்புகளை வெளியிடுவார். அதுபோல, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மக்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மக்களும் மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி கூறியதுபோல, "நாடு உனக்கு என்ன செய்கிறது என்று கேட்காதே; நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்" என்பதை மனதில் வைத்து, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை அரசுகளும், நாட்டு மக்களும் ஒற்றுமையோடு செய்ய உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நாள் இது.