விம்பிள்டன் டென்னிஸ்: 'சாம்பியன்' பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா


விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா
x

பாவ்லினியை தோற்கடித்து முதல்முறையாக கிரெஜ்சிகோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), 32-ம் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

1 மணி 56 நிமிடம் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார். அடுத்த செட்டை பாவ்லினி வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் 3-வது மற்றும் கடைசி செட்டுக்கு நகர்ந்தது. கடைசி செட்டையும் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார். முடிவில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பாவ்லினியை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் வென்ற 2-வது பட்டம் இதுவாகும். அவர் ஏற்கனவே 2021-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முத்தமிட பாவ்லினி எடுத்த முயற்சி 2-வது முறையாக கைகூடாமல் போனது. அவர் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியிலும் தோற்று இருந்தார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற கிரெஜ்சிகோவா ரூ.29¼ கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த பாவ்லினிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.


Next Story