கனடா ஓபன் டென்னிசில் சின்னெர், ஜெசிகா பெகுலா 'சாம்பியன்'
கனடா ஓபன் டென்னிசில் இத்தாலி வீரர் சின்னெர், அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.
டொராண்டோ,
சினெர் சாதனை
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் ஆகிய நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீரர் யானிக் சின்னெர் (இத்தாலி), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் சின்னெர் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் மினாரை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் வகை போட்டியாகும். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிசில் இத்தாலி வீரர் ஒருவர் மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு இத்தாலியின் பாபியோ போக்னினி 2019-ம் ஆண்டு மார்ன்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிசில் பட்டம் வென்று இருந்தார்.
கோப்பையை வசப்படுத்திய 21 வயதான சின்னெர் கூறுகையில், 'டென்னிசில் ஒவ்வொரு எதிராளியை வீழ்த்துவதும் கடினமே. இதனால் எனக்குள் நெருக்கடியை உணர்ந்தேன். அந்த நெருக்கடியை திறம்பட கையாண்ட விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் இது. கோப்பையை எனது பயிற்சி குழுவினருடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களுடன் இணைந்து ஆட்டத்திறனை மேம்படுத்த கடினமாக உழைத்தேன். அதற்குரிய பரிசு தான் இது. இந்த வெற்றி, வருங்காலத்தில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது' என்றார். அவருக்கு ரூ.8½ கோடியும், 2-வது இடத்தை பெற்ற மினாருக்கு ரூ.4½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் நேற்று வெளியான புதிய தரவரிசை பட்டியலில் சின்னெர் இரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
ஜெசிகா அபாரம்
இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லுட்மிலா சம்சோனோவாவுடன் (ரஷியா) மோதினார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் வெறும் 49 நிமிடங்களில் சம்சோனோவாவை ஊதித்தள்ளி கோப்பையை உச்சிமுகர்ந்தார். 2013-ம் ஆண்டு செரீனா வில்லியம்சுக்கு பிறகு கனடா ஓபனை ருசித்த முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். 29 வயதான ஜெசிகாவுக்கு மொத்தத்தில் இது 3-வது சர்வதேச பட்டாகும். அவருக்கு ரூ.3 கோடியே 77 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
இதைத் தொடர்ந்து வெளியான பெண்கள் தரவரிசையில் டாப்-10 இடத்தில் மாற்றமில்லை. போலந்தின் ஸ்வியாடெக், பெலாரசின் சபலென்கா, பெகுலா ஆகியோர் முதல் 3 இடங்களில் தொடருகிறார்கள். கனடா ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்ற சம்சோனோவா 6 இடங்கள் உயர்ந்து 12-வது இடத்தை பிடித்துள்ளார்.