டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் - ஸ்டெபி கிராப்பின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்


டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் - ஸ்டெபி கிராப்பின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்
x

image courtesy: Novak Djokovic twitter via ANI

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்த வகையில் ஸ்டெபி கிராப்பின் சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்தார்.

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும். 2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்கு தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இப்போது சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஒட்டுமொத்தத்தில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு 22 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபிகிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஜோகோவிச் தகர்த்துள்ளார்.

1973-ம் ஆண்டு அறிமுகம் ஆன டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் அமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவும் (332 வாரம்), 4-வது இடத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் (319), 5-வது இடத்தில் சுவிட்சர்லாந்து முன்னாள் வீரர் ரோஜர் பெடரரும் (310) உள்ளனர்.

இது குறித்து 35 வயதான ஜோகோவிச் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில், 'பல ஆண்டுகளாக என் மீது நீங்கள் (ரசிகர்கள்) காட்டும் அன்பும், ஆதரவால் தான் டென்னிசில் பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளேன். இப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் இரண்டிலும் சேர்த்து அதிக வாரங்கள் முதலிடம் வகிக்கும் சாதனை வரிசையில் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டெபி கிராப்பை முந்தியுள்ளேன். இச்சாதனை உண்மையிலேயே மிக மிக பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது' என்றார்.

துபாயில் தொடங்கியுள்ள ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் களம் காணும் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக்குடியரசு) இன்று எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story