மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி
x

மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியன்களான இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் பலப்பரீட்சையில் இறங்கினர். தொடக்கத்தில் தடுமாறி முதல் செட்டை இழந்த சிந்து 2-வது செட்டில் சுதாரித்து மீண்டார். ஆனால் கடைசி செட்டில் மறுபடியும் கரோலினா மரினின் கை ஓங்கியது. 59 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ரியோ ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் 21-12, 10-21, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கரோலினா மரினுக்கு எதிராக 15-வது முறையாக மோதிய சிந்து அதில் சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும்.

கடந்த ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சிந்து அந்த தொடரின் போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. 5 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு களம் திரும்பிய சிந்து முதல் போட்டியிலேயே ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 9-21, 17-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூ பேயிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை மாள்விகா பன்சோத் 9-21, 13-21 என்ற நேர் செட்டில் அன்சே யங்கிடம் (தென்கொரியா) தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் 22-24, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லக்ஷயா சென்னை போராடி தோற்கடித்தார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 61 நிமிடங்கள் நடந்தது. பிரனாய் அடுத்து சிகோ ஆரா டிவி வார்டோயோவை (இந்தோனேஷியா) சந்திக்கிறார். ஒற்றையர் பிரிவில் தற்போது இந்திய தரப்பில் பிரனாய் மட்டுமே களத்தில் நிற்கிறார். முன்னதாக தொடக்க நாளில் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோரும் முதல் தடையை கடக்க முடியாமல் வீழ்ந்தனர்.

ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்டில் தென்கொரியாவின் சோ சோல் கியூ- கிம் வான் ஹோ இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது. அதே சமயம் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஸ்வினி பாத்- ஷிகா கவுதம் ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.


Next Story