கனடா ஓபன் டென்னிஸ்: 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
நெருக்கடியை திறம்பட சமாளித்து வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது என்று ஜெசிகா பெகுலா தெரிவித்தார்.
டொராண்டோ,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னில் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 'நம்பர் ஒன்' வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை (போலந்து) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த மோதலில் 29 வயதான ஜெசிகா பெகுலா 6-2, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் 22 வயது ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 30 நிமிடம் நீடித்தது. இதேபோல் முந்தைய நாளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதியில் அமெரிக்க வீரர் டாமி பால், 'நம்பர் ஒன்' வீரரான அல்காரசை சாய்த்து இருந்தார். 2008-ம் அண்டுக்கு பிறகு அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஒரே வாரத்தில் நம்பர் ஒன் வீரர், வீராங்கனைகளை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
வெற்றிக்கு பிறகு ஜெசிகா பெகுலா அளித்த பேட்டியில், 'இது ஒரு சிறப்பான ஆட்டமாகும். கடினமான இந்த போட்டி ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருந்தது. கடைசியில் நெருக்கடியை திறம்பட சமாளித்து வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது' என்று தெரிவித்தார்.
இன்னொரு அரைஇறுதியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்)-சாம்சோனோவா (ரஷியா) ஆகியோர் மோத இருந்தனர். மழை காரணமாக இந்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.