மல்யுத்த சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி
மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் பஜ்ரங் புனியா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெல்கிரேடு,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் யியானி டியாகோமிஹாலிஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
எனினும் யியானி டியாகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், பஜ்ரங் புனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடி வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்திய இளம் வீரரான சாகர் ஜக்லான், 74 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். அவர் மங்கோலியாவின் சுல்ட்கு ஓலோன்பயாரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் யோனசை சந்திக்க உள்ளார். 97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் விக்கி தகுதிச் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் சாமுவேல் ஷெரரிடம் 2-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் பங்கஜ் (61 கிலோ) பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசில் அய்டகினிடம் தோல்வியடைந்தார்.