பிரைம் கைப்பந்து லீக்கில் மகுடம் யாருக்கு...? - இறுதிப்போட்டியில் டெல்லி-கோழிக்கோடு அணிகள் இன்று மோதல்


பிரைம் கைப்பந்து லீக்கில் மகுடம் யாருக்கு...? - இறுதிப்போட்டியில் டெல்லி-கோழிக்கோடு அணிகள் இன்று மோதல்
x

3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் சென்னையில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.

சென்னை,

3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் சென்னையில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. 9 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்-5 சுற்று முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது இடம் பெற்ற டெல்லி டூபான்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்சை வீழ்த்தி தனது அறிமுக சீசனிலேயே இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து அசத்தி உள்ளது.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் கோழிக்கோடு ஹீரோஸ் - டெல்லி டூபான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் லீக் சுற்றில் கோழிக்கோடு அணியும், சூப்பர்5 சுற்றில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4 ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டியில் வாகை சூடும் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.40 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

போட்டி குறித்து கோழிக்கோடு ஹீரோஸ் அணியின் கேப்டன் ஜெரோம் வினித் கூறுகையில், 'கடந்த 2 முறையும் அரையிறுதியுடன் வெளியேறிய எங்கள் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை.

ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கு வெற்றியை பரிசாக திருப்பி அளிக்க விரும்புகிறோம். இந்த லீக் போட்டி தொடர் கடினமானது. இதில் இறுதிப்போட்டி வரை வந்து இருப்பது எளிதான காரியமல்ல. என்றாலும் கோப்பையை வெல்வதற்கான திறமையும், உறுதியும் எங்களிடம் இருப்பதாக நம்புகிறோம். இறுதிப்போட்டியில் வென்றால் மதிப்பு மிக்க உலக கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பும் கிடைக்கும் என்பது எங்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது' என்றார்.

டெல்லி டூபான்ஸ் அணியின் கேப்டன் சக்லைன் தாரிக் கருத்து தெரிவிக்கையில், 'இந்த சீசனில் நன்றாக செயல்பட்ட நாங்கள் வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்புகிறோம். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.


Next Story