உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய பெண்கள் அணியில் இருந்து பி.வி.சிந்து விலகல்


உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய பெண்கள் அணியில் இருந்து பி.வி.சிந்து விலகல்
x

உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய பெண்கள் அணியில் இருந்து முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி,

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் வருகிற 27-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் தலா 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

தாமஸ் கோப்பையில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, இங்கிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். உபேர் கோப்பையில் இந்திய பெண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 15 முறை சாம்பியனான சீனா, கனடா, சிங்கப்பூர் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டிக்கான இந்திய அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய பெண்கள் அணியில் இருந்து முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்த சிந்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு ஒதுங்கி இருக்கிறார்.

இதேபோல் இரட்டையர் பிரிவை சேர்ந்த திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டா இணையும் இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தாமஸ் கோப்பை மற்றும் உபேர் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

தாமஸ் கோப்பை அணி: எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், கிரண் ஜார்ஜ் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன், துருவ் கபிலா, சாய் பிரதீக் (இரட்டையர் பிரிவு).

உபேர் கோப்பை அணி: அன்மோல் கார்ப், தன்வி ஷர்மா, அஷ்மிதா சாலிஹா, இஷாராணி பரூவா (ஒற்றையர் பிரிவு), ஸ்ருதி மிஸ்ரா, பிரியா கோன்ஜெங்பாம், சிம்ரன் சிங், ரிதிதா தாகெர்.


Next Story