புரோ கபடி பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்


புரோ கபடி பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்
x
Muthu Pandian K 12 Dec 2022 3:28 PM IST
t-max-icont-min-icon

முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது.

மும்பை,

9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. பெங்களூர், புனே, ஐதராபாத் ஆகிய 3 இடங்களில் 'லீக்' ஆட்டங்கள் நடந்தது. கடந்த 10-ந்தேதியுடன் 'லீக்' போட்டிகள் முடிவடைந்தன.

இதன் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 82 புள்ளியுடன் (15 வெற்றி, 6 தோல்வி, 1 டை) முதல் இடத்தையும், புனேரி பல்தான் 80 புள்ளியுடன் (14 வெற்றி, 6 தோல்வி, 2 டை) 2-வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த இரண்டு அணியும் அரை இறுதியில் நேரடியாக விளையாடும்.

பெங்களூரு புல்ஸ் 74 புள்ளியுடன் 3-வது இடத்தையும், உ.பி. யோதா 71 புள்ளியுடன் 4-வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் 66 புள்ளியுடன் (10 வெற்றி, 8 தோல்வி, 4 டை) 5-வது இடத்தையும், தபாங் டெல்லி 63 புள்ளியுடன் 6-வது இடத்தையும் பிடித்து 'பிளே ஆப்' சுற்றின் எலிமினேட்டர் ஆட்டங்களில் விளையாட தகுதி பெற்றன.

அரியானா ஸ்டீலர்ஸ் (61 புள்ளி), குஜராத் ஜெய்ன்ட்ஸ் (59 புள்ளி), மும்பை (56 புள்ளி) 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் (54 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (53 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (15 புள்ளி) ஆகியவை 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின. 'பிளே ஆப்' சுற்று ஆட்டங்கள் நாளை (13-ந்தேதி), மும்பையில் தொடங்குகிறது. எலிமினேட்டர் போட்டிகள் நாளை நடக்கிறது.

முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். தோற்றால் வெளியேற்றப்படும்.

இதில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அரை இறுதியில் புனேயை சந்திக்கும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'எலிமினேட்டர்1' ஆட்டத்தில் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் மோதும். அரை இறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடக்கிறது.


Next Story