ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிஷோர்குமாருக்கு ரூ.1½ கோடி பரிசு - ஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு


ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிஷோர்குமாருக்கு ரூ.1½ கோடி பரிசு - ஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு
x

image courtesy: PTI

ஆசிய விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார்.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டி தொடரின் 12-வது நாளான நேற்று இந்தியாவின் பதக்க அறுவடை நீடித்தது. தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார். அவர் தனது 4-வது முயற்சியில் 88.88 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார். இந்த சீசனில் அவர் வீசிய அதிக தூரம் இது தான்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அரியானாவை சேர்ந்த 25 வயதான நீரஜ் சோப்ரா 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் 87.54 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும்.

தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறும்போது, "வழக்கமான ஒரு போட்டியில் 6 முறை ஈட்டி எறிவேன். ஆனால் இங்கு 7 முறை எறிய வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பு இதுபோல் நான் பார்த்ததில்லை. இது தவறான விஷயம். அவர்கள் (போட்டி அதிகாரிகள்) நான் வீசிய 'த்ரோ'வை அளக்கவில்லை. அதற்குள் அடுத்த வீரர் ஈட்டி எறிய வந்து விட்டதால் நான் வீசிய தூரத்தை குறிக்க தவறி விட்டனர். எனது முதல் முயற்சி நன்றாக இருந்தது" என்று கூறினார்.

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் குமாருக்கு ரூ.1½ கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கிஷோர்குமார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.


Next Story