தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் சாம்பியன்..!


தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் சாம்பியன்..!
x

கோப்புப்படம்

சென்னையில் நடந்து வரும் தேசிய சீனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீராங்கனை ஹிமா தாஸ் சாம்பியன் ஆனார்.

சென்னை,

மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்துள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 2-வது நாளான நேற்று இந்தியாவின் மின்னல்வேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் (10.47 வினாடி) முதலிடத்தை பிடித்து அசத்தினார். தமிழக வீரர் கே.இலக்கிய தாசன் (10.48 வினாடி) 2-வது இடமும், பஞ்சாப் வீரர் ஹர்ஜித் சிங் (10.55 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் டெல்லி வீரர் அமோல் ஜேக்கப்பும் (45.68 வினாடி), 1,500 மீட்டர் ஓட்டத்தில் டெல்லி வீரர் ஹரேந்திர குமாரும் (3 நிமிடம் 44.26 வினாடி) தங்கப்பதக்கம் வென்றனர்.

'போல்வால்ட்டில்' (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) தமிழக வீரர்கள் சிவா (5 மீட்டர்) தங்கப்பதக்கமும், ஞான சோனி (4.60 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர். அரியானா வீரர் சுனில் (4.60 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

டெக்கத்லானில் ராஜஸ்தான் வீரர்கள் யாமன் தீப் ஷர்மா (6,948 புள்ளிகள்) முதலிடமும், உமேஷ் லம்பா (6,719 புள்ளிகள்) 2-வது இடமும், தமிழக வீரர் ஸ்ரீது (6,657 புள்ளிகள்) 3-வது இடமும் பிடித்தனர். ஈட்டி எறிதலில் கர்நாடக வீரர் மானு 84.35 மீட்டர் தூரம் வீசி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

நீளம் தாண்டுதலில் கேரள வீரர் ஸ்ரீசங்கர் 8.23 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். அத்துடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் அவர் கடந்தார். மற்றொரு கேரள வீரர் முகமது அனீசுக்கு (8.15 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீரர் சுவாமிநாதனுக்கு (7.89 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய அசாம் வீராங்கனை ஹிமா தாஸ் (11.43 வினாடி) மகுடம் சூடினார். மயிரிழையில் அவரை விட பின்தங்கிய தேசிய சாதனையாளரான ஒடிசா வீராங்கனைகள் டுட்டீ சந்த் (11.44 வினாடி) 2-வது இடமும், சர்பானி நந்தா (11.53 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர். தமிழக வீராங்கனை அர்ச்சனா 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

400 மீட்டர் ஓட்டத்தில் அரியானாவின் கிரண் பாஹல் (52.47 வினாடி) தங்கப்பதக்கமும், உத்தரபிரதேசத்தின் ருபால் (52.72 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் (53.78 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். 1,500 மீட்டர் ஓட்டத்தில் டெல்லி வீராங்கனை சந்தா (4 நிமிடம் 13.85 வினாடி) 'தங்கமங்கை'யாக உருவெடுத்தார்.

குண்டு எறிதலில் அரியானா வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.06 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்ததுடன், காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார். 31 வயதான மன்பிரீத் கவுர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 4 ஆண்டு தடைக்கு பிறகு கடந்த ஆண்டு தான் களம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story