உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து திடீர் விலகல்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து திடீர் விலகல்
x

உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக சிந்து நேற்றிரவு டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

புதுடெல்லி,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டியில் கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது தொடக்க ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருந்தது.

இந்த நிலையில் உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக சிந்து நேற்றிரவு டுவிட்டர் மூலம் அறிவித்தார். அந்த பதிவில் சிந்து, 'சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றேன். இந்த தொடரின் போது காயத்தால் அவதிப்பட்டேன். ஆனால் அதை சமாளித்து தான் வெற்றி பெற்றேன். இறுதிப்போட்டியின் போது வலி அதிகமாக இருந்தது. ஐதராபாத் திரும்பியதும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தேன். இதில் இடது கால் பாதத்தில் அழுத்தத்தால் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் துரதிருஷ்டவசமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது' என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரான 27 வயதான சிந்து 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.


Next Story