உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர்
உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.
டோக்கியோ,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தகுரோ ஹோகி-யுகோ கோபாயாஷி இணையை எதிர் கொண்டது.
இந்த ஆட்டத்தில் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் இந்த இணை மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் இணையை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18-21,16-21 என்ற புள்ளிகணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இந்த வெண்கலப்பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.