ஆசிய விளையாட்டு: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்


ஆசிய விளையாட்டு: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்
x

Image Courtesy : AFP

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

ஹாங்சோவ்,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இந்த போட்டியில் தடகளம், வில்வித்தை, நீச்சல், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஆக்கி, பேட்மிண்டன், வாள்சண்டை, குத்துச்சண்டை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையாக விளையாட்டுகளில் மொத்தம் 481 பந்தயங்கள் நடைபெறுகிறது.

இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தென்கொரியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான், பக்ரைன், வங்காளதேசம், பூடான், ஈரான், கஜகஸ்தான், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

காலை 6 மணி: துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு தகுதி சுற்று (ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி).

காலை 6.30 மணி: துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு தகுதி சுற்று (அனிஷ், விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங்).

காலை 6.30 மணி: பெண்கள் கிரிக்கெட் அரைஇறுதியில் இந்தியா-வங்காளதேசம் மோதல்.

காலை 7.30 மணி: டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியா-தாய்லாந்து மோதல்.

காலை 7.30 மணி: நீச்சலில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தய தகுதி சுற்று (ஸ்ரீஹரி நடராஜ்).

காலை 8.45 மணி: ஆக்கி ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டத்தில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் மோதல்.

காலை 9.30 மணி: டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் (சுமித் நாகல்).

காலை 9.30 மணி: டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் 2-வது சுற்றில் கஜகஸ்தான்-இந்தியா மோதல்.

பகல் 12.30 மணி: கைப்பந்து ஆண்கள் பிரிவு கால்இறுதியில் இந்தியா-ஜப்பான் பலப்பரீட்சை.

பகல் 1.30 மணி: கால்பந்தில் பெண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா-தாய்லாந்து மோதல்.

பிற்பகல் 2 மணி: டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் (ராம்குமார்-சகெத் மைனெனி).

மாலை 4.30 மணி: குத்துச்சண்டையில் பெண்கள் 50 கிலோ முதல் சுற்று (நிகாத் ஜரீன்).

மாலை 5 மணி: கால்பந்தில் ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-மியான்மர் மோதல்.


Next Story