ஸ்ரீஜேஷுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம் - இந்திய ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத்
ஸ்ரீஜேஷுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம் என இந்திய ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
பாரீஸ்,
33வது ஒலிம்பிக் தொடர் வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்க உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆக்கி அணி ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கி அணியில் இடம் பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக் தொடருன் சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஸ்ரீஜேஷுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறோம் என இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
பாரீஸ் ஒலிம்பிக் எங்களுக்கு முக்கியமான தொடர். இது எங்களுக்கு சிறப்பானதாக அமையும். இந்த தொடரை இந்திய ஆக்கியின் ஜாம்பவான்களில் ஒருவரான பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவர் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறார்.
2016 ஜூனியர் உலகக் கோப்பையில் நாங்கள் பட்டம் வென்ற போது அவரது ஆலோசனைகள் உதவியது. அதை நான் இன்னும் மறக்கவில்லை. நிச்சயம் அவருக்காக நாங்கள் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.