ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க மலேசியா ஆக்கி அணி சென்னை வருகை


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க மலேசியா ஆக்கி அணி சென்னை வருகை
x

மார்ஹன் ஜலில் தலைமையிலான மலேசியா ஆக்கி அணி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.

சென்னை,

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மார்ஹன் ஜலில் தலைமையிலான மலேசியா ஆக்கி அணி நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. விமான நிலையத்தில் அவர்களை ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அணியினர் அங்கிருந்து தங்குவதற்காக எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சொகுசு பஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். மலேசியா அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 3-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

விமான நிலையத்தில் மலேசிய அணியின் பயிற்சியாளர் அருள் அந்தோணி நிருபர்களிடம் பேசுகையில், 'எங்கள் அணியில் அனுபவமும், இளமையும் வாய்ந்த வீரர்கள் சமவிகிதத்தில் உள்ளனர். வருகிற ஆசிய விளையாட்டு போட்டியை இலக்காக கொண்டு நாங்கள் தயாராகி வருகிறோம். புதிய கட்டமைப்பு யுக்தியுடன் களம் காண இருக்கிறோம். சமீப காலங்களில் எங்களது அணியினர் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அந்த சிறப்பான செயல்பாட்டை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் பிரதிபலிப்பார்கள் என்று நம்புகிறேன். எனது தந்தையின் சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். தமிழகத்துக்கு மீண்டும் வந்து விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் மலேசிய ஆக்கி அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 5 முறை 3-வது இடத்தை பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அந்த அணி கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story