ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
சலாலா,
10 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே முழுமையாக கோலோச்சிய இந்தியா 17-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை ஊதித் தள்ளியது.
இந்திய அணி தரப்பில் அங்கட் 4 கோலும், கேப்டன் உத்தம் சிங், அமன்தீப் லக்ரா தலா 2 கோலும், ரவாத், அரைஜீத் சிங் ஹூன்டால், விஷ்ணுகாந்த் சிங், பாபி சிங் தாமி, ஷர்தா நந்த் திவாரி, அமன்தீப், ரோகித், சுனித் லக்ரா, ரஜிந்தர் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே சீன தைபே மற்றும் ஜப்பானை வென்று இருந்த இந்திய அணி 1-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானுடன் 'டிரா' கண்டு இருந்தது. 10 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.