உலகக் கோப்பை ஆக்கி: 2-வது சுற்றில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோதல்
உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி இன்று முக்கியமான 2-வது சுற்றில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
புவனேஸ்வர்,
15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதன்படி 'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, 'சி' பிரிவில் 3-வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் 2-வது சுற்றில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றிரவு மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி 9-வது முதல் 12-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் ஸ்பெயின், வேல்சை போட்டுத்தாக்கியது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை கோல் இன்றி 'டிரா' செய்தது. புள்ளி பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து தலா 7 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இங்கிலாந்து நேரடியாக கால்இறுதி வாய்ப்பை பெற்று விட்டது. நிக் வுட்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது பிரிவில் நெதர்லாந்து மற்றும் மலேசியாவிடம் தோல்வியை தழுவியது. சிலியை மட்டும் வீழ்த்தி இருந்தது.
உலகத் தரவரிசையில் இந்தியா 6-வது இடத்திலும், நியூசிலாந்து 12-வது இடத்திலும் இடத்திலும் உள்ளன. எல்லா வகையிலும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது. அதுவும் உள்ளூர் ரசிகர்களின் கரவொலி கூடுதல் உத்வேகம் அளிக்கும். ஆனால் தவறுக்கு இடம் கொடுக்காமல், பதற்றமின்றி விளையாட வேண்டியது அவசியம். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நடுகள வீரர் ஹர்திக் சிங் தொடரில் இருந்து நேற்று விலகினார். தாக்குதல் ஆட்டத்திற்கு பெயர் போன ஹர்திக் சிங்கின் விலகல் நிச்சயம் இந்தியாவுக்கு பின்னடைவு தான் . அவருக்கு பதிலாக ராஜ்குமார் பால் சேர்க்கப்பட்டு உள்ளார். மூத்த வீரர்கள் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப்சிங், ஆகாஷ்தீப், அமித் ரோஹிதாஸ் ஆகியோர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், 'நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது. கடந்த ஆண்டு புரோ ஆக்கி லீக்கில் இரு ஆட்டத்திலும் நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தாலும் அதில் முதல் ஆட்டம் கடுமையாக (4-3 கோல்) இருந்தது. எனவே அவர்களை வீழ்த்த எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்' என்றார். இதில் வெற்றி காணும் அணி கால்இறுதியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 24-ல் இந்தியாவும், 15-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவு இல்லை.