அடுத்த மாதம் இந்தியா வரும் ஜெர்மனி ஆக்கி அணி
ஜெர்மனி ஆக்கி அணி, இந்தியாவுடன் இரண்டு போட்டியில் விளையாட உள்ளது.
புதுடெல்லி,
ஜெர்மனி ஆக்கி அணி அடுத்த மாதம் (அக்டோபர்) டெல்லி வருகிறது. இந்தியா - ஜெர்மனி ஆக்கி அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் பாரீசில் நடந்த ஒலிம்பிக் அரைஇறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்து இருந்தது. அதன் பிறகு நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. ஜெர்மனி அணி இறுதிப்போட்டியில் நெதர்லாந்திடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
இந்நிலையில் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு வலுவான இவ்விரு அணிகளும் சந்திக்க இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், "ஜெர்மனிக்கு எதிரான ஆட்டம் உலக தரம் வாய்ந்த ஆக்கி போட்டித் தொடராக இருக்கும். இந்தியா, ஜெர்மனி அணிகள் விளையாட்டில் வளமான வரலாற்றை கொண்டவையாகும். உலகின் பலம் வாய்ந்த அணிகள், கடும் தீவிரத்துடன் மோதுவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கப்போகிறது" என்று தெரிவித்தார்.
இரு அணிகளும் இதுவரை 107 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், இந்தியா 26 போட்டிகளிலும், ஜெர்மனி 54 போட்டிகளிலும் வென்றுள்ளன. 27 போட்டிகள் சமன் ஆகியிருக்கின்றன.