அகில இந்திய ஆக்கி: இந்திய ராணுவம், பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


அகில இந்திய ஆக்கி: இந்திய ராணுவம், பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x

இந்தியன் ஆயில் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் பின்தங்கியதால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று கடைசி நாள் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை விரட்டியடித்தது.

ராணுவ அணியில் சுமீத் பால் சிங் 3 கோலும், ஹர்மன் சிங் 2 கோலும், மனிஷ் ராஜ்பார் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் மத்திய தலைமைச் செயலக அணி 6-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயிலுக்கு அதிர்ச்சி அளித்தது. தலைமைச் செயலக கேப்டனும், கோல் கீப்பருமான நவீன்குமார், இந்தியன் ஆயில் வீரர்களின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்து அமர்க்களப்படுத்தினார்.

லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியன் ரெயில்வே (2 வெற்றி, 2 டிரா) 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்தது. கர்நாடகா, நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் அணிகள் தலா 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) சமநிலை வகித்தன. ஆனால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் கர்நாடக அணி (8 கோல் அடித்தது, 7 கோல் வாங்கியது) முன்னிலை பெற்று 2-வது இடத்தை தனதாக்கியது. ரெயில்வே, கர்நாடகா அரைஇறுதிக்கு முன்னேறின. இந்தியன் ஆயில் அணி (14 கோல் அடித்தது, 15 கோல் வாங்கியது) ஒரு கோல் வித்தியாசத்தில் பின்தங்கியதால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

மத்திய தலைமைச் செயலகம் (6 புள்ளி) 4-வது இடமும், எல்லா ஆட்டங்களிலும் தோற்ற இந்திய கடற்படை கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டன. வலுவான இந்தியன் ஆயில் அணி கடைசி லீக்கில் வெற்றி பெற்று எளிதாக அரைஇறுதிக்கு முன்னேறி விடும் என நினைத்து கர்நாடக அணியினர் நேற்று காலை தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது அவர்களுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்து இருப்பதால் அவசரமாக இன்று சென்னை திரும்புகின்றனர்.

'பி' பிரிவில் இந்திய ராணுவம், பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களை சொந்தமாக்கி அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. மத்திய தணிக்கை துறை அணி (7 புள்ளி), இந்திய விமானப்படை (3 புள்ளி), தமிழ்நாடு (1 புள்ளி) முறையே 3-வது, 4-வது, 5-வது இடங்களை பெற்று அரைஇறுதி வாய்ப்பை நழுவவிட்டன.

இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-கர்நாடகா (மாலை 4 மணி), இந்திய ராணுவம்-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story