தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி 'சாம்பியன்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

சென்னை,

27-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் நடந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, அரியானாவை எதிர்கொண்டது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது.

50-வது நிமிடத்தில் அரியானா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தமிழக வீராங்கனை துர்கா கோல் எல்லைப்பகுதியில் பந்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது அவரது காலில்பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுயகோலாக மாறியது. இதைத்தொடர்ந்து 57-வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி அபாரமாக கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

81-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இதனை இந்துமதி கோலாக மாற்றினார். இதன் மூலம் கிடைத்த முன்னிலையை தமிழக அணி கடைசி வரை தக்கவைத்துக் கொண்டது. முடிவில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக சொந்தமாக்கியது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் கோப்பையை வென்று இருந்தது.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத தமிழக அணி லீக் ஆட்டங்களில் கர்நாடகா, ஒடிசா, ஜார்கண்ட், சண்டிகார், பஞ்சாப் அணிகளை பந்தாடியதுடன் அரைஇறுதியில் ரெயில்வேயை சாய்த்து இருந்தது. தமிழக அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளில் 12 பேர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்.டி.ஏ.டி.) பயிற்சி பெற்ற முன்னாள் மாணவிகள். அத்துடன் அணியின் பயிற்சியாளரான கோகிலாவும், உதவி பயிற்சியாளரான லதாவும் எஸ்.டி.ஏ.டி.யை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் 'சாம்பியன்' பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

"தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமான வெற்றியைப் பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்குப் பாராட்டுகள். ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அடைந்திருக்கும் இவ்வெற்றி மிகவும் சிறப்புக்குரியது. உங்களது அர்ப்பணிப்பும், திறமையும், அணியாக ஒருங்கிணைந்து விளையாடிய பாங்கும் எங்களைப் பெருமைகொள்ளச் செய்துள்ளன. தொடர்ந்து உயரப் பறந்து மென்மேலும் நம் மாநிலத்துக்குப் பெருமை சேர்ப்பீராக."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story