உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டம்: ஐக்கிய அரபு அமீரகத்தை துவம்சம் செய்தது அர்ஜென்டினா அணி


உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டம்: ஐக்கிய அரபு அமீரகத்தை துவம்சம் செய்தது அர்ஜென்டினா அணி
x

Image Tweeted By Argentina

தினத்தந்தி 16 Nov 2022 11:25 PM IST (Updated: 16 Nov 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல் மழை பொழிந்து அமீரக அணியை துவம்சம் செய்தனர்.

அபுதாபி,

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் அபுதாபியில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியும்- மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல் மழை பொழிந்து அமீரக அணியை துவம்சம் செய்தனர். இறுதியில் அர்ஜென்டினா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணி தரப்பில் ஏஞ்சல் டி மரியா இரண்டு கோல்களும், லியோனல் மெஸ்ஸி, ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் ஜோக்வின் கொரியா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.


Next Story