ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் வரலாற்று சாதனை


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் வரலாற்று சாதனை
x

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் கடந்த ஒரு மாதம் நடந்தது. இதில் தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், ரூ,256 கோடியை பரிசாக அள்ளியது.

ஸ்பெயின் அணி ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வசப்படுத்துவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் பட்டத்தை வென்றிருந்தது. இதன் மூலம் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற வரலாற்றை ஸ்பெயின் படைத்தது. ஜெர்மனி அணி 3 முறை வென்று அடுத்த இடத்தில் உள்ளது.

நடப்பு ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 51 ஆட்டங்களில் 117 கோல்கள் பதிவாகின. இதில் 10 கோல் சுயகோலாகும். அணிகளில் ஸ்பெயின் மொத்தம் 15 கோல் போட்டு முதலிடம் பிடித்தது. இதன் மூலம் யூரோ கால்பந்து தொடர் ஒன்றில் அதிக கோல் அடித்த அணி என்ற வரலாற்று பெருமையை பெற்றது. இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு தொடரில் பிரான்ஸ் 14 கோல் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.


Next Story