ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் தொடக்க வீரராக இறங்குகிறார் லோகேஷ் ராகுல்


ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் தொடக்க வீரராக இறங்குகிறார் லோகேஷ் ராகுல்
x

கோப்புப்படம்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக இறங்குகிறார்.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

சமீப காலமாக இந்திய அணியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுகிறது. முந்தைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானுடன் இணைந்து, இளம் வீரர் சுப்மான் கில் விளையாடினார். 3 ஆட்டத்தில் ஆடி 2 அரைசதம் உள்பட மொத்தம் 205 ரன்கள் எடுத்து தொடர்நாயகனாக ஜொலித்தார். ஆனால் ஜிம்பாப்வே தொடரில் தொடக்க வரிசையில் இருந்து சுப்மான் கில்லை மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்த லோகேஷ் ராகுல், கொரோனா தொற்றில் சிக்கியதால் மேலும் இரு வாரங்கள் ஒதுங்கி இருந்தார். கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டியதால் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானுக்கு பதிலாக ராகுல் நியமிக்கப்பட்டார். இதனால் தவானுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

ராகுல் வருகை தந்திருப்பதால் அவர் மூத்த வீரர் தவானுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுப்மான் கில் 3-வது வரிசையில் களம் காணுவார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான தீப் தாஸ் குப்தா கூறும் போது, 'லோகேஷ் ராகுலை பொறுத்தவரை இந்த தொடரில் கணிசமான ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவரை 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க வரிசைக்கு தயார்படுத்த அணி நிர்வாகம் முனைப்பு காட்டும். இதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அவர் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட வேண்டியது முக்கியம். இது ஒரு குறுகிய கால ஏற்பாடாகத்தான் இருக்கும்.

சுப்மான் கில் இப்போது 3-வது வரிசைக்கு இறக்கப்படலாம். ஆனாலும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்குள் சுப்மான் கில் தன்னை ஒரு தொடக்க வீரராக நிலைநிறுத்தி விடுவார் என்று நினைக்கிறேன்' என்றார்.


Next Story