இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் - ரோகித்துக்கு ஆர்.பி.சிங் அறிவுரை


இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் - ரோகித்துக்கு ஆர்.பி.சிங் அறிவுரை
x

Image Courtesy: @ICC

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது.

ராஜ்கோட்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நடந்து முடிந்துள்ள 2 ஆட்டங்களிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் 24, 39, 14, 13 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.

இந்நிலையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று ரோகித் சர்மா அதிகமாக சிந்திப்பதாலேயே தடுமாறுவதாக ஆர்.பி. சிங் கூறியுள்ளார்.

எனவே எதைப்பற்றியும் கவலைப்பட்டு அதிகமாக யோசிக்காமல் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே உங்களால் அசத்த முடியும் என்று ரோகித் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரோகித் சர்மா அதிகப்படியாக சிந்திக்கிறார். குறிப்பாக சில முக்கிய வீரர்கள் இல்லாததால் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக அவர் எப்படியாவது பெரிய இன்னிங்ஸ் விளையாடி 2 - 3 பார்ட்னர்ஷிப் அமைக்க அதிகமாக முயற்சிக்கிறார். அதை செய்வதில் அவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

பொதுவாக அவர் அப்படி விளையாடக்கூடிய வீரர் இல்லை. அவருடைய பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். ஆனால் தற்போது அவருடைய ஆட்டத்தில் சுதந்திரமான அதிரடியை காண முடியவில்லை. எனவே அதிக எச்சரிக்கையுடன் ரோகித் சர்மா செயல்பட்டால் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அசத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story