பெண்கள் டி20 உலகக்கோப்பை; இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


பெண்கள் டி20 உலகக்கோப்பை; இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
x

Image Courtesy : @BCCIWomen

இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் எடுத்தது.

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று துபாயில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா களம் இறங்கினர்.இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிருதி மந்தனா 50 ரன்னிலும், ஷபாலி வர்மா 43 ரன்னிலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர்.

தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிச்சா கோஷ் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன், ஸ்மிருதி மந்தனா 50 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து, அமா காஞ்சனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்னே மற்றும் சமாரி அத்தப்பத்து களமிறங்கினர். இதில் விஷ்மி குணரத்னே முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் சமாரி அத்தப்பத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்ஷிதா 3 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 19.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story