பெண்கள் பிரிமீயர் லீக்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? மும்பை-உ.பி. அணிகள் இன்று மோதல்


பெண்கள் பிரிமீயர் லீக்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? மும்பை-உ.பி. அணிகள் இன்று மோதல்
x

வெளியேற்றுதல் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி) அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

ஆனால் ரன்-ரேட் (+1.856) அடிப்படையில் முன்னிலை வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரன் ரேட்டில் (+1.711) பின்தங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது இடத்தையும், 8 புள்ளிகள் பெற்ற உ.பி.வாரியர்ஸ் அணி (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெற்றன.

2 வெற்றி, 6 தோல்விகளுடன் தலா 4 புள்ளிகள் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடத்தையும், குஜராத் ஜெயன்ட்ஸ் கடைசி இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் மும்பை அணியும் (8 விக்கெட் வித்தியாசம்), 2-வது ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணியும் (5 விக்கெட்) வெற்றி பெற்றுள்ளன. இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்: ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நடாலி சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசபெல்லா வோங், அமன்ஜோத் கவுர், ஹூமைரா காஸி, ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக்.

உ.பி.வாரியர்ஸ்: தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்), கிரண் நவ்ஜிரி, தாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.


Next Story