ஐதராபாத் அணியின் அதிரடி தொடருமா? - பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்


ஐதராபாத் அணியின் அதிரடி தொடருமா? - பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்
x

பிரப்சிம்ரன் சிங் மற்றும் அபிஷேக் ஷர்மா (image courtesy: Punjab Kings twitter)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிரடியை தொடரும் உத்வேகத்துடன் ஐதராபாத் அணி இன்று பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.

நடப்பு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய பஞ்சாப் அணி அடுத்த ஆட்டங்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 21 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 200 ரன் இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. பெயர் குழப்பத்தால் அணியில் அங்கமான ஷசாங் சிங் (61 ரன்) அதிரடி காட்டி அசத்தினார்.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடிய கேப்டன் ஷிகர் தவான், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் இருந்தாலும் ஷிகர் தவான் தவிர மற்ற இரு வீரர்களும் தடுமாறுகிறார்கள். பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா கைகொடுத்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ரபடா, ஹர்பிரீத் பிரார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர், சாம் கர்ரன் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி கணிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. அந்த அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னையை சாய்த்தது. முதல் 2 ஆட்டங்களிலும் அதிரடியாக 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து மிரட்டிய ஐதராபாத் அணி மீண்டும் தனது அதிரடியை தொடருமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் கலக்குகிறார்கள். பந்து வீச்சில் கம்மின்ஸ், நடராஜன் நல்ல நிலையில் உள்ளனர். ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது பிரச்சினையாக இருக்கிறது.

3-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பஞ்சாப்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், சிகந்தர் ராசா அல்லது லிவிங்ஸ்டன், ஷசாங் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ககிசோ ரபடா.

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story