ரஞ்சி கிரிக்கெட்டில் கோப்பையை வெல்வது யார்? - பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் இன்று பலப்பரீட்சை
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
கொல்கத்தா,
ரஞ்சி கிரிக்கெட்டில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆகாஷ்தீப், சுதீப்குமார் கராமி, அனுஸ்டப் மஜூம்தார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்தேவ் உனட்கட் சவுராஷ்டிரா அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்படுகிறார்.
கடந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட பார்த் புட்டுக்கு இடம் கிடைக்காது. சவுராஷ்டிரா அணியில் ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வசவதா, சிராக் ஜானி, சேத்தன் சகாரியா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். கடைசியாக 1989-90-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்ற பெங்கால் அணி அதன் பிறகு 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் 2019-20ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சவுராஷ்டிராவிடம் தோல்வி கண்டதும் அடங்கும். முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தங்களது 34 ஆண்டுகால கோப்பை ஏக்கத்தை தணிக்க சொந்த மண்ணில் பெங்கால் அணி தீவிரம் காட்டும்.
2012-13-ம் ஆண்டில் இருந்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கும் சவுராஷ்டிரா அணி, இந்திய அணிக்காக 100-வது டெஸ்டில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்) விளையாடும் தங்கள் மாநில சீனியர் வீரரான புஜாராவுக்கு சரியான கவுரவம் அளிக்கும் வகையில் ரஞ்சி கோப்பையை வெல்வோம் என்று அந்த அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் உறுதியளித்துள்ளார்.
கோப்பையை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இறுதிப்போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.