தோனியின் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்...? - இளம் வீரரை தேர்வு செய்த அம்பதி ராயுடு...!
தோனியின் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்...? என்ற கேள்விக்கு அம்பதி ராயுடு தனது தேர்வை கூறியுள்ளார்.
ஐதராபாத்,
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார்.
தோனிக்கு 42 வயது கடந்துள்ளதால் அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வுக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விக்கு அம்பதி ராயுடு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வருங்காலத்தை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நினைக்கிறேன். அவரிடம் ஏராளமான தலைமைப் பண்பும் உள்ளது.
எனவே, மஹி பாய் அவரை (கெய்க்வாட்) ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வளர்த்தால், அவர் அடுத்த 7-8 அல்லது 10 ஆண்டுகள் வரையிலும் அணியை வழிநடத்த முடியும். அவர் மஹி பாய் மற்றும் ப்ளெமிங் ஆகியோருடன் நன்றாக இருக்கிறார். அவர் அமைதியானவர், மிகவும் திறமையானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.