ரிஷப் பண்ட் - தோனி ஆகியோரில் சிறந்த கீப்பர் யார்? பாக்.முன்னாள் வீரர் கருத்து
தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
கராச்சி,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.
அது போக ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் சிறந்தவர் என்று பலரும் பாராட்டத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் எப்போதும் அவரால் தோனிக்கு நிகராக முடியாது என்று தினேஷ் கார்த்திக், அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தம்முடைய கருத்தை தெரிவித்தது பின்வருமாறு:-"முதலில் இது போன்ற விஷயங்கள் எப்படி உங்களுடைய மனதில் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ரிஷப் பண்ட் தோனியை விட சிறந்தவரா? மன்னிக்கவும். தோனி ஒரு லீடர். அவர் இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றவர். ரிஷப் பண்ட் தற்போது அசத்துகிறார். அவரை விளையாட விடுங்கள். இங்கே நான் 2 எடுத்துக்காட்டுகளை கொடுக்க விரும்புகிறேன். அதை வைத்து புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சுப்மன் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவீர்களா? பெரும்பாலானவர்கள் வேண்டாம் என்று சொல்வார்கள். தற்போது தோனி ஐபிஎல் தவிர்த்து அனைத்து கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் இப்போதும் மைதானத்திற்கு வரும்போது ரசிகர்களிடம் கிடைக்கும் கைதட்டல்கள்தான் தோனியை பற்றிய தரத்தையும் மதிப்பையும் சொல்லும்.
அதே மைதானத்தில் ரிஷப் பண்ட்டும் வருவார். எனவே செயல்பாடுகளைத் தாண்டி அந்த கைதட்டல்களை வைத்து தான் நான் சிறந்தவரை முடிவெடுப்பேன். என்னைப் பொறுத்த வரை ரிஷப் பண்ட் ஓய்வு பெற்ற பின் வேண்டுமானால் இப்படி ஒப்பிடலாம். ஆனால் இப்போதே ஒப்பீடுகள் வேண்டாம். கீப்பர் என்பதைத் தாண்டி தோனி ஒரு லீடர்" என்று கூறினார்.