சேவாக் யார்? - தன்னை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த ஷகிப்


சேவாக் யார்? - தன்னை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த ஷகிப்
x

நீங்கள் ஒன்றும் ஆஸ்திரேலிய வீரர் இல்லை என்று ஷகிப் அல் ஹசனை சேவாக் விமர்சித்திருந்தார்.

கிங்ஸ்டன்,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த 27-வது லீக்கில் (டி பிரிவு) வங்காளதேச அணி, நெதர்லாந்துடன் மோதியது. மழையால் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 64 ரன்கள் அடித்தார். பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. வங்காளதேச அணியின் இந்த வெற்றிக்கு 64 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் சுமாராக விளையாடிய ஷகிப் வங்காளதேசத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அப்போது நீங்கள் ஆஸ்திரேலிய வீரர் கிடையாது என்பதால் ஒரு வங்காளதேச வீரருக்கு தேவையான பேட்டிங்கை செய்யுமாறு அவரை சேவாக் விமர்சித்தார். சமீபத்திய வருடங்களாகவே தடுமாறும் ஷகிப் அல் ஹசனின் காலம் முடிந்து நீண்ட நாட்களாகி விட்டதாக சேவாக் கூறினார். எனவே ஷகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என்று அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் சேவாக்கின் அந்த விமர்சனம் பற்றி இப்போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் ஷகிப்பிடம் கேட்டனர். அப்போது குறுக்கிட்ட அவர் சேவாக் யார்? என்று பதிலடி கொடுத்தார். இது குறித்து ஷகிப் பேசியது பின்வருமாறு;-

"சேவாக் யார்? ஒரு வீரர் எப்போதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வருவதில்லை. பேட்ஸ்மேனாக இருந்தால் பேட்டிங்கிலும் பவுலராக இருந்தால் பந்து வீச்சிலும் அணியின் வெற்றிக்கு பங்காற்றுவதே அந்த வீரரின் வேலை. விக்கெட் விழுவது அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

அதேபோல அந்த வீரர் பீல்டராக இருந்தால் ஒவ்வொரு ரன்னையும் சேமித்து நிறைய கேட்சுகளை பிடிக்க வேண்டும். இதை தவிர்த்து யாருக்காகவும் எதையும் பதிலாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது விளையாடும் வீரர் தன்னுடைய அணிக்காக எவ்வளவு பங்காற்ற முடியும் என்பதை பார்ப்பதே முக்கியம்" என்று கூறினார்.

இது தற்போது சமூக வலை தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Next Story