பெங்களூரு - சென்னை போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - முகமது கைப் கணிப்பு


பெங்களூரு - சென்னை போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - முகமது கைப் கணிப்பு
x

ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. அதே போல 3-வது இடத்தைப் பிடிக்க ஐதராபாத் அணிக்கு அதிக வாய்ப்புள்ளது.

எனவே மே 18-ம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் வென்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்னை செல்லுமா? அல்லது பெங்களூரு தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும். அதற்கு 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும் அல்லது சேசிங் செய்தால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும்.

இந்நிலையில் இப்போட்டியில் சென்னை அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முகமது கைப் தெரிவித்துள்ளார். குறிப்பாக அழுத்தமான போட்டியில் பதற்றமடையக் கூடாது என்ற தோனியின் பார்முலா சென்னை அணிக்கு வெற்றியை கொடுக்கும் என்று கைப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"சென்னை அணிக்கு பெரிய போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும். கடந்த சீசனில் அவர்கள் கோப்பையை வென்றனர். அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது கிட்டத்தட்ட தோல்வி உறுதியானது. அப்போது ஜடேஜா பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தார். தோனி இப்போது நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அவருடன் பேட்டிங் செய்யும் யாராக இருந்தாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆட்டத்தை விளையாடுவார்கள்.

நெருக்கமான போட்டியில் பதற்றமடையாமல் விளையாட வேண்டும் என்பதே தோனியின் பார்முலா. நெருக்கமான போட்டிகளில் அவர் மட்டுமே இந்த கலையை கொண்டுள்ளார். எத்தனையோ கேப்டன்கள் வந்தாலும் முக்கியமான போட்டியில் தோனியின் விழிப்புணர்வுத் தன்மை மற்றவர்களால் ஈடு செய்ய முடியாததாகவே இருக்கிறது. அவர் குறைந்த தவறுகளை செய்வதாலேயே சென்னை சாம்பியன் அணியாக இருக்கிறது. எனவே பெங்களூரு அணிக்கு எதிரான இப்போட்டியில் சென்னை வெல்ல அதிக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.


Next Story