கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய அணியிலிருந்து அதனை அகற்றிவிட்டேன் - ரோகித் பெருமிதம்
இந்தியா விரைவில் ஐ.சி.சி. கோப்பையை வெல்லும் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் அவர், ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
இருப்பினும் 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்ற காரணத்தால் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இந்தியாவுக்கும் ஐ.சி.சி. கோப்பைகளை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருடைய தலைமையில் 2023 ஆசிய கோப்பை மட்டுமே இந்திய அணி வென்றது. ஆனால் ஐ.சி.சி. தொடர்களில் அவருடைய தலைமையிலும் இந்தியா தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தாம் கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய அணியில் சொந்த சாதனைக்காக விளையாடும் எண்ணத்தை முற்றிலுமாக அகற்றியதாக ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அணியாக சேர்ந்து விளையாடும் இந்தியா விரைவில் ஐ.சி.சி. கோப்பையை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்காக இன்னும் சில வருடங்கள் விளையாட ஆசைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
"கடந்த 17 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வரும் என்னுடைய பயணம் அற்புதமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் விளையாடி உலக கிரிக்கெட்டில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். உங்களுடைய நாட்டுக்கு கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய கவுரவமாகும். என்னைப் பொறுத்த வரை இந்தியாவின் கேப்டனாக நான் இருப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் நல்ல மக்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொல்வார்கள்.
இந்தியாவின் கேப்டனாக நான் பொறுப்பேற்றபோது அனைவரும் ஒரு திசையை நோக்கி பயணிக்க விரும்பினேன். அணி விளையாட்டை அப்படித்தான் விளையாட வேண்டும். அது சொந்த சாதனைகள், லட்சியங்களை பொறுத்தது கிடையாது. அது 11 வீரர்களும் சேர்ந்து கோப்பையை எப்படி வெல்கிறோம் என்பதைப் பொறுத்தது. என்னுடைய வாழ்விலும் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்துள்ளேன். கடந்த காலங்களில் பார்த்த பள்ளங்களால்தான் இன்று ஒரு நல்ல மனிதராக இருக்கிறேன்" என கூறினார்.