"ஜாகீர் கான், நெஹ்ரா செய்த சாதனையை அவர் செய்து வருகிறார் " - பஞ்சாப் வீரரை பாராட்டிய சேவாக்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளருக்கு சேவாக் புகழாரம் தெரிவித்துள்ளார்.
மும்பை,
பஞ்சாப் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். நடப்பு ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். குறிப்பாக இந்த சீசனில் அவர் அதிரடி பேட்ஸ்மேன்-களுக்கு எதிராக கடைசி ஓவரில் அட்டகாசமாக பந்து வீசினார்.
டெத் ஓவர்களில் 7.91 எகானமி உடன் அவர் ஐபிஎல்-லில் பந்துவீசி உள்ளார். இதன் மூலம் ஐபிஎல்-லில் பும்ரா-விற்கு அடுத்தபடியாக சிறந்த எகானமி உடன் பந்துவீசிய வீரராக அவர் உள்ளார்.
இதனால் அவர் தென் ஆப்பிரிக்க தொடருக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்காக நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் தெரிவித்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் குறித்து அவர் கூறுகையில், " அர்ஷ்தீப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடைசி மூன்று ஓவர்களில் இரண்டை ஓவர்களை சிறப்பாக வீசுவதால் என்னைக் கவர்ந்தார். அவர் அதிக விக்கெட்களை வீழ்த்தாமல் இருக்கலாம். ஆனால் அவரது எகானமி விகிதம் சிறப்பானது.
புதிய பந்தில் ஒரு ஓவரையும், ஸ்லாக் ஓவரில் இரண்டு ஓவரையும் வீசும் பந்து வீச்சாளர் அவர். என்னுடைய காலத்தில் ஜாகீர் கானும், ஆஷிஷ் நெஹ்ராவும் மட்டுமே அதைச் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். இப்போது அதை அர்ஷ்தீப் மற்றும் பும்ரா, புவனேஷ்வர் செய்து வருகின்றனர். டெத் ஓவர்களில் பந்து வீசுவது மிகவும் கடினமான வேலை" என சேவாக் தெரிவித்தார்.