பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி குறித்து கெய்க்வாட் கூறியது என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
சென்னை,
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பஞ்சாப் கிங்சும் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை ஒரளவு சமாளித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 62 ரன்கள் அடித்தார்.
பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பேர்ஸ்டோ 46 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இன்னும் இந்த போட்டியில் 50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் கூடுதலாக குவித்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இருப்பினும் இந்த போட்டியில் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் இந்த இலக்கு நிச்சயம் குறைவுதான்.
நான் டாஸ் போடுவதை பிராக்டிஸ் செய்தாலும் எனக்கு சாதகமாக அமையவில்லை. போட்டிகளில் விளையாடுவதை விட டாஸ் போடும்போது எனக்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது. கடந்த போட்டியில் நாங்கள் 78 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றிருந்தோம். அதேபோன்று இந்த போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும். எங்களது அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியது எங்களுக்கு பின்னடைவை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.