பெங்களூரு அணியை போன்று செயல்பட விரும்புகிறோம் - வெங்கடேஷ் ஐயர் பேட்டி


பெங்களூரு அணியை போன்று செயல்பட விரும்புகிறோம் - வெங்கடேஷ் ஐயர் பேட்டி
x

பெங்களூரு அணியை பார்த்து தாங்களும் தொடர்ச்சியாக வென்று வேகமாக செயல்பட விரும்புவதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு சீசனில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 159 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிபாதி 55 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வெறும் 13.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களும் அடித்தனர்.

இந்நிலையில் வெற்றிக்கு பின் கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "தன்னம்பிக்கையை விட களத்தில் சென்று நான் பேட்டிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் கடைசியாக நாங்கள் மே 11-ம் தேதி விளையாடினோம். எங்களுடைய திறமையை இப்போட்டியில் காண்பிப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. இந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் எங்களுடைய பவுலர்களை சேரும். ஏனெனில் அவர்கள் எதிரணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

இது போன்ற தொடரில் வேகம் மிகவும் முக்கியமானது. பெங்களூரு அணி அவர்களின் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வேகத்தை பெறுவதை நாங்கள் பார்த்தோம். எனவே நாங்களும் அதே வேகத்தை விரும்பினோம். ஆனால் இடையே மழை வந்ததால் கொஞ்சம் ஏமாற்றத்தை சந்தித்தோம். இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த எங்களுக்கு அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களிடம் நிறைய ஆதரவு கிடைக்கிறது.

ஐ.பி.எல். பைனல் போன்ற போட்டியில் விளையாடுவது எங்களைப் போன்ற வீரர்களுக்கு எப்போதுமே கனவாகும். சென்னையில் நடைபெறும் அந்தப் போட்டிக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் உள்ள அதே வேகத்தில் நீங்கள் அங்கு சென்று விளையாட விரும்புவீர்கள். ரிங்கு சிங் முக்கியமான கேட்சுகளை பிடித்தார். அதேபோல பைனலில் சென்று நாங்கள் விளையாட உற்சாகத்துடன் இருக்கிறோம்" என்று கூறினார்.


Next Story