160 ரன்கள் வரை அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம் ஆனால்... - சிக்கந்தர் ராசா


160 ரன்கள் வரை அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம் ஆனால்... - சிக்கந்தர் ராசா
x

Image Courtesy: @ZimCricketv

நாங்கள் 180 ரன்கள் அடித்திருந்தால் கூட அது வெற்றிக்கு உதவி இருக்காது என்று தோன்றுகிறது என சிக்கந்தர் ராசா கூறியுள்ளார்.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா அளித்த பேட்டியில் கூறியதாவது, பந்து பேட்டுக்கு நன்றாகவே வந்தது. 160 ரன்கள் வரை நாங்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் இந்திய அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது நாங்கள் 180 ரன்கள் அடித்திருந்தால் கூட அது வெற்றிக்கு உதவி இருக்காது என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய விசயங்களை கற்று வருகிறோம்.

இந்த போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களின் போது இன்னும் 8 முதல் 10 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் எங்களால் கொஞ்சம் போட்டியை அளித்திருக்க முடியும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இந்த தொடரின் எஞ்சியுள்ள ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்றுக்கு இரண்டு (2-3) என்ற கணக்கில் இந்த தொடரை முடிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story