நாங்கள் வெற்றியை நோக்கி மட்டும்தான் விளையாடினோம் - பேட் கம்மின்ஸ் பேட்டி
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின.
ஆண்டிகுவா,
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் (ஹாட்ரிக்) வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற 52 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வார்னர் 53 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மழை இடைவிடாது பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் (டி.எல்.எஸ்.) விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பேட் கம்மின்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்த சமயத்தில் எனக்கு ஹாட்ரிக் குறித்து எதுவும் தெரியாது. நான் இருபதாவது ஓவரை வீச வந்த பொழுது திரையில் ஹாட்ரிக் குறித்து காட்டப்பட்டது. ஆனால் எனக்கு, செட் ஆகி இருந்த பேட்ஸ்மான் ஹ்ரிடாய் விக்கெட்டை கைப்பற்றி, அவர்களை கட்டுப்படுத்தியதுதான் மகிழ்ச்சி.
பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஆஸ்டன் அகர் மற்றும் நாதன் எல்லீஸ் இருவரும் ஏற்கனவே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். ஜூனியர்களுடன் அந்த பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களுடைய மெருகூட்டப்பட்ட சிறந்த செயல் திறன்.
நாங்கள் வெற்றியை நோக்கி மட்டும்தான் விளையாடினோம். மேலும் எங்களுடைய ரன் ரேட் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி விளையாடினோம். சூப்பர் 8 சுற்றில் நாங்கள் இந்த வேகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.